“பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்” நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள் கணவர், உங்கள் நண்பர், உங்கள் உறவினருக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த நீதி, இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதாகும். இந்த நினைவிடத்திற்கு முன், நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது, மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம், அன்புடன் கூடிய ஒற்றுமை நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்ற உறுதிமொழியை எடுப்பதாகும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்ல, படைவீரர்கள் நினைவிடத்தில் இன்று (19) பிற்பகல் நடைபெற்ற 16 ஆவது படைவீரர்கள் தின நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தினத்தை நினைவுகூறும் நிகழ்வு இன்று (19) பிற்பகல் பத்தரமுல்ல, படைவீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக, முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.