ராமேஸ்வரத்தையும், மண்டபம் பகுதியையும் இணைக்கும் இரயில்வே கடல் பாலம் புதிய தொழில்நுட்பத்தில் அதி நவீனமாக கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவின்போது ராமேஸவரம்- தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக இலங்கையின் அனுராதபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் சென்ற பிரதமர் மோடி. அங்கிருந்து கார் மூலம் பாம்பன் கடல் மேம்பாலத்தை அடைந்தார். அங்கிருந்தபடி பாம்பன் ரயில் பாலத்தையும், புதிய ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ், ஆளுநர் ஆர். என். ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே முதலாவது வெர்ட்டிகல் லிப்ட் கடல் பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்த கிட்டத்தட்ட நூறாண்டுகளைக் கடந்த பழைய பாம்பன் பாலத்திற்குப் பதில் இந்தப் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலமானது 2.07 கிலோமீற்றர் நீளம் கொண்டது. பாக் நீரிணையின் மீது இந்த பாலம் செல்கிறது. இந்தப் பாலத்தின் நடுவே, தானியங்கி தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது கப்பல்கள் இந்தப் பகுதி வழியாக கடந்து செல்லும்போது இந்த தூக்கு பாலமானது மேலெழும்பி கப்பல் செல்ல வழி கொடுக்கும்.
இந்தப் பாலத்தில் இரு முனை ரயில்வே பாதைகளை அமைக்க முடியும். இருப்பினும் தற்போது ஒரு வழிப் பாதை மட்டுமே போடப்பட்டுள்ளது.
பழைய பாலத்தை விட 3 மீற்றர் உயரம் கொண்டதாக புதிய பாலம் அமைந்துள்ளது. இங்கிலாந்தின் டவர் பிரிட்ஜ், அமெரிக்காவின் கோல்டன் கேட் பாலம் ஆகியவற்றுக்கு நிகராக புதிய பாம்பன் பாலம் அமைந்துள்ளது.
பழைய பாம்பன் பாலம் கடந்த 1914ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியின்போது கட்டப்பட்டது. இந்தப் பாலத்தில் இடம் பெற்றுள்ள தூக்கு பாலமானது மனிதர்களால் இயக்கப்படக் கூடியதாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தில் எல்லாமே தானியங்கியாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.