Saturday, November 1, 2025 3:53 pm
பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷொப்பின் பைகளுக்கு இன்று முதல் கட்டணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. இதன்மூலம் பொலித்தின் பாவனையை குறைக்கலாம் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது
கட்டணம் அறவிடப்படுவதனால் நுகர்வோர் ஷொப்பின் பைகளை வீட்டில் இருந்து எடுத்து செல்வார்கள் எனும் நம்பிக்கையிலும், வீட்டில் இருந்து எடுத்து செல்வதை ஊக்கிவிக்கும் விதமாகவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
வியாபார நிலையங்களில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என கடந்த அக்டோபர் முதலாம் திகதி 2456/41 இலக்கமுடைய வர்த்தமானி அரசாங்கத்தினால் வெளியிடு செய்யப்பட்டது.
அதற்கமைய வர்த்தக நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.


நடுத்தர அளவிலான ஷொப்பின் பைகளுக்கு 3 ரூபாவாகவும் பெரிய கைப்பிடி பைகளுக்கு 5 ரூபாவாகவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது. இதனை கீல்ஸ், காகில்ஸ் புட் சிட்டி, லாப்ஸ் சூப்பர், ஸ்பார் மற்றும் குளோமார்க் உள்ளிட்ட வியாபார நிலையங்கள் இணைந்து அறிவித்துள்ளன.
இதேவேளை குறித்த பைகளுக்கென அறவிடப்படவுள்ள தொகையை வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டுமெனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

