இந்திய அளவில் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் முடிவுகள் வெளியிடப்படுகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதத்துக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய பெறுமதிப்படி ரூ.11 ஆயிரத்து 251 கோடியே 30 இலட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய பெறுமதிப்படி ஜூன் மாதம் ரூ.10 ஆயிரத்து 800 கோடியே 20 இலட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய முதல் காலாண்டில் இந்திய பெறுமதிப்படி ரூ.35 ஆயிரத்து 861 கோடியே 10 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் காலாண்டில் இந்திய பெறுமதிப்படி ரூ.32 ஆயிரத்து 115 கோடியே 50 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது 11.7 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது.
இந்திய ஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 69 சதவீதமாக உள்ளது. இதனால் திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் முன்னேற்றப்பாதையில் பயணிப்பது ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் ஏற்ற, இறக்கமான தேவைகளுக்கு மத்தியில் திருப்பூர் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நிலையான செயல்பாட்டின் நேர்மறையான வளர்ச்சியின் அறிகுறியாகும். உலக ஆடை வர்த்தக சந்தையில் இந்தியாவின் தொடர்ச்சியான போட்டித்தன்மை மேலும் வலுவடைந்து வருவதை காட்டுகிறது என ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.
இந்தியாவின் ஆடை ஏற்றுமதியின் இலக்கை நோக்கி தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதி செய்யும் விதமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கொள்கை பரிந்துரை, சந்தை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாடு போன்ற முயற்சிகள் மூலம் வரும் காலங்களில் திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வளர்ச்சி தொடரும் எனவும் தெரிவித்தார்.