பாக்கி நீரிணையின் கேந்திர ரீதியாக மிகவும் முக்கியமான திட்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கான நோக்கிய படகு சேவையை ஆரம்பிக்க இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கி உள்ளது.
தலைமன்னாரில் இருந்து கடலின் நடுவில் உள்ள 6வது திட்டு வரையான சுற்றுலாப் பயணிகள் படகுச் சேவை தொடங்குவதற்கான அனுமதி இப்போது அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று இதற்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. .
அவுவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆறு இருக்கைகள் கொண்ட 10 படகுகளை தலைமன்னார் பகுதிக்கு தருவித்துள்ளார். கடலில் சுமார் 13 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள 5 வது திட்டைத் தாண்டி 6வது திட்டுவரை படகுச் சேவை நடைபெறும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே 11 திட்டுகள் உள்ளன. 6 திட்டுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
சுற்றுலாப் பயணிகள் சேவையை ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் கடற்படை முகாமின் கடற்படை அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், வன ஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் கடந்த 18 ஆம் திகதி திட்டுகளைப் பார்வையிட்டனர்.
மூன்றாவது திட்டில் கடற்படையின் பாவனை அதிகம் என்பதால் அங்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது.
நான்காவது திட்டில் அதிக வலசை பறவைகள் தங்கியிருப்பதனால் அங்கும் அனுமதிக்க முடியாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான சுமார் 445 மில்லியன் ரூபா செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 250 மில்லியன் ரூபாவும், இரண்டாம் கட்டப் பணிகளிற்கு 195 மில்லியன் ரூபா செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் 25 ஆம் திகது சுற்றூலாப் பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த சுற்றுலாப் பயணத்தில் பங்குபெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 120 வெளிநாட்டவர் அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும், இந்த சேவை அன்றாடம் இடம்பெறுமா அல்லது கிழமைக்கு ஒருமுறை இடம்பெறுமா போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சுற்றுலாப் பயணிகள் சேவையை நடத்த அனுமதியை வழங்குமாறு ஜனவரி 20 ஆம் திகதி அந்த நிறுவனம் மாவட்டச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியது.
இதனை முழுமையாக மத்திய அரசே முன்னெடுப்பதனால் இதன் மூலம் மாகாண சுற்றுலா அதிகார சபைக்கோ அல்லது உள்ளூராட்சி மன்றத்திற்கோ வருமானம் கிடைப்பது கடினம்.
பூகோள ரீதியில் இந்திய எல்லை வரையில் இடம்பெறவுள்ள இத்திட்டத்தில் வெளிநாட்டவர்களும் சென்று வர முடியும் என்பதனால் இத்திட்டம் மீது இந்தியாவின் கழுகுப் பார்வையும் திரும்பும். அப்போதே இத்திட்டத்தின் இருப்பு எந்தளவிற்கு நெருக்கடிக்குள் ஏற்படக் கூடும் என்று அறியப்படுகிறது.
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, அனலைதீவு போன்ற இடங்களில் சீனா மின்சாரத் திட்டத்தை ஆரம்பிக்க முற்பட்டபோதே அதனை ராஜதந்திர ரீதியில் இந்தியா தடுத்திருந்த்து. தற்போது தனக்கு மிக அண்மை வரையில் வரும் இத் திட்டத்தை இந்தியா ஏற்குமா என்பதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.