எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்த, தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுற்றுலாவிற்காக தங்காலை பகுதியில் இருந்து சென்ற 32 பேர் அடங்கிய குழுவினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 24ஆவது கிலோமீற்றர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ.கே.ரூபசேன உட்பட நகர சபையின் 12 ஊழியர்கள், இரண்டு குழந்தைகள், பஸ் சாரதி ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.