சுவீடனை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரான இளம்பெண் க்ரேட்டா தன்பெர்க் – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோருக்கு இடையேயான மோதல் சூடுபிடித்துள்ளது.
சுவீடன் நாட்டை சேர்ந்த க்ரேட்டா தன்பெர்க் தனது சிறு வயதில் இருந்தே பருவநிலை மாற்றம் குறித்த அபாயங்களை உலகிற்கு எடுத்துச் சொல்லி பிரபலம் ஆனவர். அப்போது முதலே க்ரேட்டாவிற்கும், ட்ரம்புக்கும் இடையில் வார்த்தை மோதல் இருந்து வருகிறது. 2015 பரிஸ் பருவநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதை க்ரேட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் இஸ்ரேலால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக படகில் பொருட்களை ஏற்றிக் கொண்டு கடல் வழியாக சென்ற க்ரேட்டாவை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து, அவரது நாட்டிற்கே நாடு கடத்தியது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலை க்ரேட்டா விமர்சித்தார்.
இந்நிலையில் “க்ரேட்டா தன்பெர்க் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை போல செயல்படுகிறார். எப்போதும் மூர்க்கமாக நடந்துக் கொள்கிறார். புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். அவர் ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்து பேசிய க்ரேட்டா “கோபத்தை கட்டுப்படுத்துவது குறித்து ட்ரம்பிடம் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவர்து கடந்த கால செயல்களை பார்த்தால் அவருக்குமே இந்த பிரச்சினை இருப்பதை போல தெரிகிறது” என கூறியுள்ளார்.