சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அழைப்பின் பேரில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் குறித்து ஆராய, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமையில், சுகாதார அமைச்சில் சிறப்புக் கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.
தொற்றுநோயியல் பிரிவு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலின் போது, இரத்தினபுரி மருத்துவமனை தொடர்பாக சமீபத்திய நாட்களில் அறிவிக்கப்பட்ட நிலைமை மற்றும் ஆபத்து நிறைந்த மாவட்டங்களின் தற்போதைய நிலைமை ஆகியவை மிக ஆழமாக ஆராயப்பட்டன.
இங்கு, டெங்கு ,சிக்குன்குனியா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படை நடைமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது, மேலும் பல முடிவுகளும் இங்கு எடுக்கப்பட்டன, குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்குக் தெளிவு படுத்துவதற்கு திட்டங்களை மிக விரைவாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஹசித திசேரா மற்றும் அந்தத் துறைகளில் பணிபுரியும் விசேட வைத்தியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற அதிகாரிகள் குழு இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.