ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது.
இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் அடிப்படையாக அமைந்த மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இத்தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுபோன்ற வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரியுள்ளது.
நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது.