செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்படும் உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் என நாம் கோரும் அதேவேளை, உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவரைக் கண்டித்தும் பாரிய கண்டன பேரணியினை எதிர்வரும் 30ஆம் திகதி நடாத்தவுள்ளோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா தெரிவித்தார்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 30ம் திகதி ஓகஸ்ட் மாதம் 2025 ஆம் ஆண்டு சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினமாகும். இத்தினத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்தவுள்ளோம்.
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகின்றோம். ஆயுத மௌனிப்புடன் 2009ஆம் ஆண்டு யுத்தமானது மிகப் பெரும் இனவழிப்பின் ஊடக முடிவுறுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னரும் அதன் பின்னரும் சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பும், செம்மணி மனிதபுதைகுழி உட்பட பல மனித புதைக்குழிகளும், சித்திரவதை முகாம்கள் ஆகியவை இனப்படுகொலைக்கான முக்கிய ஆதாரங்களாக எம் கண் முன் நிலைத்து நிற்கின்றன. இவை அனைத்தும் சர்வதேச விசாரணை ஒன்றின் கீழ் முறையாக விரைந்து விசாரிக்கப்பட வேண்டும். சர்வதேச நீதி விசாரணை காலதாமதமின்றி நடாத்தப்படவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் பெற வேண்டிய உண்மையான நீதியும், அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகத்தின் செயற்பாடுகள் இன்றியமையாதவையாகும்.
அந்த வகையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தவும் அனைத்து நாடுகளும் ஒருமித்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறும் மனித உரிமைகளை பேணும் அனைத்து நாடுகளிடமும் கோருகின்றோம்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்படும் உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் என நாம் கோரும் அதேவேளை, உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவரைக் கண்டித்தும் பாரிய கண்டன பேரணியினை எதிர்வரும் 30ஆம் திகதி நடாத்தவுள்ளோம்.
பேரணி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும், வடமாகாணத்தில் சங்கிலியன் நினைவிடத்தில் தொடங்கி செம்மணி வரை பேரணியாக நடைபெறவுள்ளது.
எனவே இப் பேரணியில் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்தினர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள், தொழிலாளர் சங்கங்கள், கிராமிய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் அனைவருரையும் இணையுமாறு அழைக்கின்றோம் என தெரிவித்தார்.