இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 3-ஆவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவரில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித், கார்ஸ் அரை சதம் கடந்தனர்.
இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா இதுவரை வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா – 13 முறை 5 விக்கெட், கபில் தேவ் – 12 முறை விக்கெட், அனில் கும்ப்ளே – 10 முறை 5 விக்கெட் எடுத்துள்ளனர்.