கனடா நாட்டின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்து வந்தார். சமீபத்தில் அவர் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டார். மார்க் கார்னியும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது
முதல் அமைச்சரின் பெயர் அனிதா ஆனந்த். இவர் அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்னொருவர், கமால் கெரா. சுகாதாரத் துறை அமைச்சராக கமால் கெரா பதவியேற்றுள்ளார். இருவரும் இந்திய வம்சாவளியினர் ஆவர்.
கனடா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனிதா ஆனந்த்தின் பெற்றோர் தமிழ்- பஞ்சாபி பூர்வீகத்தைக் கொண்டவர்கள் ஆவர்.
அனிதா ஆனந்த்தின் தந்தை எஸ்.வி. ஆனந்த் ஆவார். தாயார் பெயர் சரோஜ் ராம். தந்தை தமிழர், தாயார் பஞ்சாபி ஆவார். அனிதா ஆனந்த்துக்கு கீதா ஆனந்த் என்ற அக்காவும், சோனியா ஆனந்த் என்ற தங்கையும் உள்ளனர். அனிதா ஆனந்தின் பெற்றோர் தீவிர காந்தியவாதிகள் ஆவர்.
1985ம் ஆண்டு அனிதாவின் பெற்றோர் கனடாவுக்கு இடம் பெயர்ந்து செட்டிலானார்கள். அனிதா ஆனந்த் பிறந்தது கென்ட்வில்லி நகரில். 57 வயதாகும் அனிதா ஆனந்த்தின் முழுப் பெயர் இந்திரா அனிதா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இன்னொரு இந்திய வம்சாவளி தலைவரான கமால் கெரா, 36 வயதேயான கமால் கெரா, டெல்லியில் பிறந்தவர் ஆவார். இவரும் பஞ்சாபி வம்சாவளிதான். கனடா பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் இளைய வயது எம்பிக்களில் இவரும் ஒருவர் ஆவார். கடந்த 2015ம் ஆண்டு இவர் பிராம்ப்டன் மேற்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். நர்ஸிங் பணியில் ஈடுபட்டிருந்தவர் கமால் கெரா. சிறந்த செயல்பாட்டாளர். தற்போது அவருக்கு சுகாதாரத் துறையே கொடுக்கப்பட்டுள்ளது.