கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்களுக்கு விபத்து காப்புறுதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இதுவரையில் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை பல்வேறு விவசாய பயிர்கள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய துறைகளுக்கு பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், கடற்றொழிலாளர் சமூகத்துக்கு தனித்துவமான இந்தக் காப்பீட்டுத் திட்டம், விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட அண்மைய காப்பீட்டுத் திட்டமாகும்.
பாதகமான வானிலை/காலநிலை காரணமாகவோ அல்லது கடற்றொழிலில் ஈடுபடும் போது ஏற்படக்கூடிய ஏதேனும் விபத்து காரணமாகவோ உயிரிழப்பு அல்லது வேறு இயலாமை ஏற்பட்டால் இதனூடாக காப்பீடு வழங்கப்படும்.
அத்துடன், கடற்றொழில் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும்போதும் ஏற்படக்கூடிய விபத்து மரணம் அல்லது இயலாமைகளுக்கும் இதனூடாக பயன்களை பெறமுடியும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை கூறுகிறது.