அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குச்சவெளி பிரதேச சபையை ஆட்சியமைப்பதற்கான சகல திட்டங்களையும் முன்னெடுத்து வருவதுடன் அதிகமான ஆசனங்களைப் பெற்று ஊழலற்ற ஆட்சியொன்றை அமைப்பது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்று நிலாவெளி – வேலூர் வட்டார வேட்பாளர் எஸ்.எம்.முபீன் (ரபீட்) தெரிவித்தார்.
கோபாலபுர பிரதேச அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் தேர்தல் பணிமனையில் இன்று திங்கட்கிழமை காலை (21) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் ஆட்சி செய்த எம்மவர்கள், பல பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கிச் சென்றவர்கள் மீண்டுமொரு பொய்யைச் சொல்வதற்கு மக்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். இதனை எமது பிரதேச மக்கள் நம்புவதற்கு தயாரில்லை. அவர்களின் செயற்பாடுகள் யாவும் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கமாகவே இருக்கின்றதே தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் மக்கள் நன்கறிந்து விட்டார்கள்.
பிரதேச சபை ஊடாக என்னென்ன விடயங்களை முன்னெடுத்துச் செல்லாம் என்பதைக்கூட அறியாத உறுப்பினர்கள்தான் கடந்த காலங்களில் இருந்த உறுப்பினர்களாகும். சபையின் செயற்பாடுகள் என்ன? சபை யாருக்காக இயங்குகின்றது? மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை எவ்வாறு வழங்கலாம் என்பதைப் பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும், அதன் உறுப்பினர்களும் செய்து காட்டுவார்கள்.
எமது குச்சவெளி பிரதேச சபை இரு சமூகம் சார்ந்து வாழ்கின்றதொரு பிரதேச சபையாக இருப்பதனால், எமது மக்களிடத்தில் ஐக்கிய சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சபையைக் கொண்டு செல்வதோடு, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத் திட்டங்களை கட்டியெப்புதல், சகல இன மக்களுக்கும் பாரபட்சமின்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே எமது கட்சியின் சிந்தனையும் நோக்கமுமாகும் என்றார்.