Friday, June 20, 2025 9:44 pm
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் திகதியில் வரும் சர்வதேச யோகா தினமானது உண்மையில் ஒரு நாளில் முடிந்து போகும் நிகழ்வு தானா? பெருந்தொற்று, போர் காரணமாக மனித குலம் இழப்புகளைச் சந்தித்து வருவது மட்டுமல்லாமல், பலரும் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டு பயம், வேதனை மற்றும் பொருளாதார இழப்புகளினால் ஏற்பட்ட வறுமை நிலை என்று எண்ணிலடங்காப் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். அன்றாடம் உழைத்து சீவனம் செய்பவர்கள் பாடு சொல்லத் தேவையில்லை.
இன்பம் என்று கருதியிருந்த காலத்தில் கடவுளைப் பற்றி சிந்தனை, தேடல் இல்லாமல் இருத்த பலர், துன்பம் என்று வந்து விட்ட இக்காலத்தில் கடவுளே இல்லை என்று சமூக வலைத்தளங்களில் எழுதுவதை காணக் கூடியதாக உள்ளது. உண்மையில் இன்பம், துன்பம் என்ற இருமைகளில் பாதிக்கப்படாத ஒரு பாதையைக் கண்டு கொண்ட, என்றும் ஆனந்தமயமாக இருக்கக் கற்றுக் கொண்ட ஒரு கூட்டம் இந்த கொரோனா காலத்தை இயல்பாகக் கடந்து வருகிறது. இவர்களை இல்லற யோகிகள், தன்னை உணர்ந்தவர்கள், என்று பலவாறாக அழைத்துக் கொள்ளலாம். ‘நடுவு நின்றாரோடு நானும் நின்றேனே’ என்ற திருமூலர் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது. உண்மையில் நாம் இந்த இடர் காலத்தில் எமது உடல், உள வளத்தைக் காக்க, ஆன்மீக வழியை தேடி, எமது பிராண சக்தியோட்டம் நிகழும் நாடிகளில் ஏற்பட்டுள்ள தடைகளை நீங்கி ஆத்ம பலத்துடன் வாழ வேண்டிய காலமிது. சித்தர்கள், முத்தர்கள் காட்டிய யோக வழி நிற்பதன் மூலம் புலன்கள் எம்மை ஆள விடாமல், யோக, தியான முறைகளைக் கைக்கொள்வதன் மூலம் ஆன்ம உணர்வு பெறலாம். கடவுள் என்பது உள்ளத்தைக் கடந்து சென்று உணர வேண்டிய உண்மை. இதனை சித்தர்கள் கண்டுணர்ந்து எமக்கு உரைத்தனர். திருமூலரின் பாடலோன்று…….
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
நடமாடும் கோயிலான பசித்திருக்கும் மனிதர்களுக்கு படைக்கும் உணவு, படமாக காட்சி தரும் கடவுளுக்கு படைத்ததாகவே கருதப்படும் என்பதே இத்திருமந்திரப் பாடலின் கருத்து. இக்காலகட்டத்தில் இப்பாடலின் முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பலரும் சக மனிதர்களுக்கு உதவி வருகிறார்கள்.
இன்றைய நவீன உலகின் வாழ்க்கை முறைகளினால் மனித குலம் மீட்சி அடைய வேண்டும் என்று தமது ஞானத்தால் அறிந்தே சித்தர்கள் தம் யோக அனுபவங்களை பாடல்களாக எழுதி வைத்துவிட்டுப் போனார்கள். அந்த வகையிலேயே கி.பி 203 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பரங்கிப்பேட்டையில் பிறந்த நாகராஜ் என்ற இயற்பெயரும், இன்று கிரியா யோக மூலகுரு மகாஅவதார் பாபாஜி நாகராஜ் என்றும் அழைக்கப்படும் உலகறிந்த சித்தரின் வாழ்க்கையைப் பார்க்க் வேண்டும். கதிர்காமத்தில் போகநாத சித்தரிடம் யோக,தியானங்களைக் கற்று, பொதிகையில் அகத்தியரிடம் கிரியா குண்டலினி பிராணாயாம தீட்சையும் பெற்று, பத்திரிநாத்தில் சொரூப சமாதியடைந்தார். ஆதிசங்கரர், கபீர்தாஸ் போன்ற பலரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உ.றுதுணையாக இருந்திருக்கிறார்.

மகாஅவதார் பாபாஜி நாகராஜ்

லாகிரி மகாசாயர்
நவீன உலகுக்கு இல்லறத்தில் இருந்து கொண்டே யோகியாக வாழ்ந்து காட்டியவர் லாகிரி மகாசாயர். ஆங்கில இராணுவத்தில் கணக்காளராகப் பணியாற்றிய போது, இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ராணிகேட் என்ற இடத்தில் பாபாஜியால் ஆட்கொள்ளப்பட்டு கிரியா யோகத்தில் தீட்சை வழங்கப்பட்டது. பாபாஜியுடன் தங்கிவிட விரும்பினார் லாகிரி மகாசாயர். ஆனால் பாபாஜியின் விருப்பத்திற்கிணங்க தன் வாழ்நாள் முழுதும் ஒரு இல்லற யோகியாக வாழ்ந்து இன்று கிரியா யோகிகள் உலகெங்கும் உருவாகுவதற்கு அடித்தளம் அமைத்தார்.
‘மனிதன் விரும்பும் அனைத்துமாக முடியும், ஏனெனில் தெய்வீகம் அவனுள் உள்ளது’ என்கிறார் அரவிந்தர். அந்த தெய்வீகத்தைக் கண்டு கொள்ள தடையாக இருப்பது நான் மனம், நான் உடல் என்ற தவறான எண்ணம் தான். இதையும் தாண்டிய அந்த உணர்வு நிலை என்று எம்மை அடையாளம் காணும் போது விடுதலை கிடைக்கிறது. இந்த விடுதலை நோக்கிய பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறது யோகம்.
இந்த மனிதப்பிறவி எவ்வளவு புனிதமானது என்று தெரிந்து கொள்வதற்குள் வாழ்வின் பெரும் பகுதி நமக்குக் கடந்து விடுகிறது. இது எமது கர்மவினையினால் நிகழ்வது. எனினும் வாழ்வில் படிப்பினைகள் நிகழும் வரை மாற்றத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஏன் ஒவ்வொரு கணமும் யோகக் கணங்களாக மாற்றுவதன் மூலம் நித்திய ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.
விழிப்புணர்வுடன் எமது செயல்களைச் செய்தல், எமக்கு ஏற்படும் உணர்வுகளை சாட்சிபூர்வமாக நின்று அவதானித்தல், ஒருவர் பேசும் போது முழுக்கவனத்துடன் செவிமடுத்தல் எனும் பயிற்சிகள் எமது உள்ளக தேடலுக்கு துணை நிற்கும். ஒருவர் பேசும் போது அவரைப் பற்றி எம் ஆழ்மனதில் போட்டு வைத்த அபிப்பிராயங்கள், அவர் ஒரு நல்ல திட்டத்தை, உண்மையைக் கூறினாலும் கூட, எம்மால் முழுமையாக கேட்க விடாமல் செய்து விடுகிறது.

தொலைக்காட்சியில் அரசு கூறும் இடர்கால விதிகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானது. எனினும் நீண்ட நேரம் எதிர்மறையான செய்திகள், நாடகங்கள் என்று மாயைக்குள் மாயையைத் தேடி மாய்ந்து போய்விடக் கூடாது. வாழ்வில் உண்மையைப் பேசுதல், தேடுதல் என்ற சிறிதாகத் தொடங்கும் பயிற்சிகள், மிகப்பெரிய உண்மையான அந்த இறைசக்தியுடன் எம்மைப் பிணைக்க உதவும். மனதை, நான் உடல் என்ற உணர்விலிருந்து நான் தெய்வீக ஆத்மா என்ற உணர்வு நிலைக்கு அழைத்துச் செல்ல மந்திரங்கள் துணை நிற்கின்றன. ஓய்வு நேரத்தில் உருத்திராட்ச மாலை உதவியுடன் மந்திர செபம் செய்வதன் மூலம் மனஅமைதியைப் பெறலாம். ‘ஓம் கிரியா பாபாஜி நம ஔம்’ எனும் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் கிரியா பாபாஜியின் அருளைப் பெறலாம்.
‘இறப்பதற்கு முன் இறந்துவிடு’ என்றொரு தத்துவம் உண்டு. ஆசைகள், பற்று, பட்டம், பதவி மோகம், அபிப்பிராயங்கள், இனமத அடையாளங்கள் என இடையில் வந்து சேர்ந்தவற்றைத் துறந்து வாழ்தல், இறந்து வாழ்வதற்கு சமனானது. உண்மையான விடுதலையும், யோக வாழ்வும் இதுதான். நேரம் என்பது ஒரு மாயை. இறந்த காலங்களை நினைத்து துயருறுவதை நிறுத்தி, நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் கடமைகளைச் செய்வதன் மூலம், நம்மை அறியாமலே எதிர்காலத்தை வளமாக்கலாம். கணங்களில் வாழ்வதன் மூலம் உள்ளக சோதியை பிரகாசமாக எரிய விட்டு என்றும் ஆனந்தத்தை அனுபவிப்போம்.

