ஓணம் பண்டிகையை கொண்டாட அவுஸ்திரேலியா சென்ற பிரபல நடிகை நவ்யா நாயர், தனது கைப்பையில் இருந்த ஒரு முழம் மல்லிகை பூவுக்காக ரூ.1 லட்சத்திற்கும் மேல் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார்.
விக்டோரியாவில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்க நவ்யா நாயர் மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது, அவரது கைப்பையை சோதனை செய்த அதிகாரிகள், அதில் இருந்த ஒரு முழம் மல்லிகை பூவுக்காக 1.14 இலட்சம் [ இந்தியரூபா]அபராதம் விதித்தனர்.
இது குறித்து நவ்யா நாயர் பேசும்போது, “என் அப்பா எனக்கு அன்புடன் அளித்த மல்லிகை பூவை தலையில் வைத்துக்கொண்டும், மீதியை பையிலும் எடுத்து வந்தேன். ஆனால், ஆஸ்திரேலியாவின் சட்டங்களுக்கு எதிராக நான் செயல்பட்டது தவறுதான். அறியாமையால் செய்த தவறை மன்னிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்” என தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்படும் தாவரங்கள், விதைகள், பூக்கள், பழங்கள், காய்கறிகள், மண் , விலங்குகள் சார்ந்த பொருட்களை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.