ஊதியம் , தரைவழிப் பணிகள் தொடர்பான வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏர் கனடா விமானப் பணிப்பெண்கள் விமான நிறுவனத்துடன் “தற்காலிக” ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.இந்த வேலை நிறுத்தம் காரணமாக உலகளவில் 500,000 பேரின் பயணம் இரத்து செய்யப்பட்டது.
சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு சுமார் 10,000 விமானப் பணிப்பெண்கள் வேலையை விட்டு வெளியேறினர், ஏர் கனடா அதிக ஊதியம் மற்றும் ஊதியம் பெறாத தரை வேலைகளுக்கான இழப்பீடு போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டதாகத் தெரிவித்தனர்.
பணிக்குத் திரும்புவதற்கான ஒழுங்குமுறை தீர்ப்பாயத்தின் இரண்டு உத்தரவுகளை ஊழியர் சங்கம் மீறியதால் ஏர் கனடா சேவையை ஓரளவு மீட்டெடுப்பதற்கான திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஆனால் திங்கட்கிழமை மாலை பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கிய பின்னர், தொழிற்சங்கம் விமான நிறுவனத்துடன் ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகவும், அதை அதன் உறுப்பினர்களின் பரிசீலனைக்கு வைப்பதாகவும் கூறியது.
“வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நாங்கள் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை உங்களிடம் கொண்டு வருவோம்,” என்று கனடிய பொது ஊழியர் சங்கத்தின் (கியூப்) ஏர் கனடா கிளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.