ஆசனங்களின் வகைகள்: ஆசனங்களை நின்ற நிலையில் செய்யும் ஆசனங்கள், இருந்த நிலையில் செய்யும் ஆசனங்கள், மல்லாந்து படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள் மற்றும் குப்புறப் படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள் என்று பொதுவாக வகைப்படுத்தலாம். நின்று செய்யும் ஆசன வகையில் ஏகபாதாசனம் செய்யும் முறையைப் பார்க்கலாம்.
முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் எல்லா உயிர்களையும் துன்புறுத்தி மகிழ்ந்தான். அவனும், அவன் சந்ததியினரும் இறந்தபின் ஆவிகளாக அலைந்து துன்புற்றனர். இந்த வம்சத்தில் பிறந்த பகீரதன் என்பவன் தன் முன்னோர் நிலையறிந்து, அவர்களைக் கரையேற்றும் வழியை ஒரு முனிவரிடம் வேண்டினான். ஆகாயத்தில் பாயும் கங்கையை பூமிக்கு வரவழைத்து அதைக் கொண்டு பிதுர்கடன் செய்தால் துன்பம் நீங்கும் என வழி காட்டினார். ஒற்றைக் காலில் கால் கட்டை விரலைத் தரையில் ஊன்றி, கைகள் இரண்டையும் தலைமேல் கூப்பி இரவு பகலாக உணவின்றி, சிவனை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். அவன்மீது மனமிரங்கி சிவன் ஆகாய கங்கையை பூமியில் பாயும்படி செய்தார். ஆனால் கங்கையின் வேகத்தை பூமியால் தாங்க முடியவில்லை. பகீரதன் மனம் தளராது தவத்தை மீண்டும் தொடர, சிவனும் கங்கையை தன் சடையில் தாங்கி அதன் வேகத்தைக் குறைத்து, அமைதியாக்கி பூமியில் பாய விட்டார். கங்கையின் புனித நீர் முன்னோரது எலும்புகளை நனைக்க, அவர்களின் ஆத்மா சாந்தியடைந்தது. பகீரதன் மூலம் வந்த காரணத்தால் பகீரதி எனப் பெயர் உண்டாகியது.

( பல நதிகளின் கூடலால் உருவாகும் கங்கை, இங்கே பகீரதி நதியும் அழக்நந்தா நதியும் உத்தர காண்டத்தில் இணைகின்றன.)
பொறுமையோடும் விடாமுயற்சியோடும் ஒரு காரியத்தை செய்து முடிக்க விளைவதை “ பகீரதப் பிரயத்தனம் “ என்று கூறுகிறோம். ஒரு பொருளை வாங்க அழும் பிள்ளைகளை “ பிடிவாதமாக ஒற்றைக்காலில் நிற்கிறான் “ என்று பெற்றோர் கூறுவதை நினைத்துப் பாருங்கள். நாம் அறியாமலே தவங்களைச் செய்து பல காரியங்களை நம் வாழ்வில் சாதித்திருக்கிறோம். அந்த வகையில் ஏகபாத ஆசன தவத்தால் உடலியல் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

( மகாபலிபுரத்தில் காணப்படும் இச்சிற்பம் பகீரதனின் தவத்தைக் குறிப்பதாக கருதப்படுகிறது. )
யோகாசனத்தில் இந்த “ஒற்றைக்காலில்” நிற்கும் ஆசனம் ஏகபாதாசனம், விருட்சாசனம் மற்றும் பகீரதாசனம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
யோகம் என்பது உடல், மனம், ஆன்மா இவைகளை இணைக்கும் ஒரு பழமையான கலையாகும். அட்டாங்க யோகத்தில் இயமம், நியமத்திற்கு அடுத்து மூன்றாவதாக வருவது ஆசனம். “எந்த நிலையிலும் உறுதியாகவும் சுகமாகவும் இருப்பது தான் ஆசனம்” என பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் கூறுகிறது. இந்த வகையில் ஏகபாதாசனம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை
- நேராக நிமிர்ந்து கைகளை உடலின் பக்கவாட்டில் வைத்து நிற்கவும்.
- வலது காலைத் தூக்கி மடக்கி பாதத்தை இடது தொடையின் உட்புறமாக வைக்கவும்..
- இடது கால் நேராக இருப்பதை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் சமநிலையை அடைந்தபின், நீண்ட உள்மூச்சு எடுத்து, மெதுவாக உங்கள் கைகளை காதோரமாக ஒட்டி இருக்க தலைக்கு நேர்மேலே கும்பிட்ட நிலையில் நிறுத்துங்கள்.
- உங்களுக்கு முன்னுள்ள ஒரு புள்ளியின் மீது கண்களையும், ஆசன நிலையில் இயல்பான மூச்சின் மீது மனதையும் நிறுத்துவதன் மூலம் சமநிலையைப் பேணமுடியும்.
- முள்ளந்தண்டு நேராகவும், முகம் இறுக்கமாக இல்லாமல் புன்முறுவலுடனும் இருக்கட்டும்.
- மெதுவான வெளிமூச்சுடன் கைகளை பக்கத்திற்கு கொண்டு வரவும். மெதுவாக காலையும் கீழே இறக்கவும்.
- மறுகாலிலும் இதே வகையில் செய்ய வேண்டும்.
- ஆரம்ப பயிற்சியாளர்கள் காலை தொடையின் உட்புறம் வைப்பது கடினமாக இருந்தால் காலை முழங்காலுக்கு கீழே வைக்கலாம். முழங்கால் மூட்டின் மீது வைக்கக்கூடாது.
இலகுவான ஆசனம் போல தோன்றினாலும் முதன்முதலாக செய்பவர்களுக்கு சமநிலையைப் பேணுவது சவாலாகவே இருக்கும். இங்கு சமநிலை என்பது பெயர்ச்சொல் என்பதை விட வினைச்சொல் என்பதே சரி. மரங்கள் காற்றில் ஆடி , மழையில் நனைந்து உறுதியுடன் நிற்பது போல நாமும் பயிற்சியின் மூலம் உடல், மன அளவில் பலமடைய முடியும்.
பலன்கள்;
- இவ்வாசனத்தைச் செய்வதால் மன ஒருமைப்பாடு, மன அமைதி, தன்னம்பிக்கை பெருகும்.
- வாழ்வின் மற்றைய செயற்பாடுகளிலும் சமநிலையைப் பேணலாம்.
- கால் தசைகள் பிட்டம் வரை உறுதி பெறும்.
- இடுப்புக்கும், கீழ் முதுகுக்கும் வலிமையைக் கொடுக்கும்.
- எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.
ஏகபாத ஆசனத்தை நாம் பகீரதனைப் போல் ஆயிரம் வருடங்கள் செய்யத்தேவையில்லை. ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் செய்ய அதற்குரிய பலன்கள் கிடைக்கும்.