எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று வெல்லவாயில் நடைபெற்றது.
பஸ் விபத்து நடந்த நேரத்தில், கவிழ்ந்த பஸ்ஸில் முதலில் ஏறி காயமடைந்தவர்களை மீட்டவர் இராணுவ விசேட அதிரடிப் படையின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ. எம். வி. எம். பண்டார என்ற வீரராவார்.
இந்தப் பாராட்டு நிகழ்ச்சி வெல்லவாய ஐக்கிய நலன்புரி சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இராணுவ வீரரின் தாயார், மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி மற்றும் வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் டபிள்யூ. நிஹால் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது, இராணுவ வீரருக்கு நினைவுச் சின்னமும் பல பரிசுகளும் வழங்கப்பட்டன.
16 பேரின் உயிரைப் பறித்த எல்ல-வெல்லவாய வீதியில் நடந்த இந்த பஸ் விபத்தில் சுமார் 18 பேர் காயமடைந்தனர்.
எல்லவிலிருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற பஸ் எதிரே வந்த ஜீப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
தங்காலை நகர சபை ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ், சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது 200 மீற்றர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது, பஸ்ஸில் இருந்த குழுவை மீட்க உதவிய இரண்டு பேரும் காயமடைந்த நிலையில், அவர்களில் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ. எம். வி. எம். பண்டாராவும் அடங்குவார். இந்நிலையில், அவர் இப்போது ஓரளவு குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.