எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று (4) இரவு பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர் தியத்தலாவை விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் மருத்துவக் குழுவினருடன் கூடிய Bell-412 ஹெலிகொப்டரும் வீரவில விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்தவர்களை கொழும்புக்கு வான்வழி ஊடாக கொண்டு செல்ல அல்லது தேவையான மீட்பு நடவடிக்கைகளில் உதவ அவை தயார் நிலையில் உள்ளன.
விபத்து இடம்பெற்றபோது மீட்பு பணிகளுக்காக, இலங்கை விமானப்படையின் விசேட மீட்புக் குழுவையும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மேலும், கண்காணிப்பு நோக்கங்களுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பீச்கிராஃப்ட் விமானம் நேற்று பயன்படுத்தப்பட்டது.
விபத்து இரவில் நடந்ததால், மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக இருந்த நிலையில், விமானம் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.
