இலங்கை , மாலைதீவு ஆகியவற்றுக்கான சுவிஸ் தூதர் டாக்டர் சிரி வால்ட் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை[11]கலந்துரையாடல் நடைபெற்றது.
சந்திப்பின் போது, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை சஜித் கோரினார். புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதற்கான சுவிட்சர்லாந்தின் 2023 சட்டத்தை அவர் பாராட்டினார், இது காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதில் ஒரு வரலாற்று நடவடிக்கை என்று விவரித்தார்.
இலங்கையின் சமீபத்திய மின்வெட்டு பற்றி கருத்துத் தெரிவித்த சஜித், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்குமாறு தானும் மற்றவர்களும் அரசாங்கத்தை பலமுறை வலியுறுத்தியதாகக் கூறினார். மின்சார நுகர்வு மற்றும் எரிசக்தி உற்பத்தியில் உள்ள பொருத்தமின்மையால் ஏற்படும் அமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மின்வெட்டுக்கு வழிவகுத்தன என்று அவர் விளக்கினார்.
சுவிஸ் தூதரிடம் ஆதரவைக் கோரிய சஜித் பிரேமதாச, தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கும் எதிர்கால மின்வெட்டைத் தடுப்பதற்கும் அரசாங்கம் உடனடியாக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.