அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறலாம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை இரு அமைப்புகளில் இருந்தும் வெளியேறும் முடிவை டிரம்ப் எடுத்தால் அது உலகையே புரட்டிப் போடுவதாக இருக்கும். சொல்லப்போனால் ஒரு வகையில் அது அமெரிக்காவுக்கும் பின்னடைவாக இருக்கும்.சமீபத்தில் நடந்த ஜி20 கூட்டத்திலும் கூட அமெரிக்க ட்ரஷரி செயலாளர் (Treasury Secretary) ஸ்காட் பெசென்ட் பங்கேற்கவில்லை.
அமெரிக்கா விலகினால்.. அது இரு அமைப்புகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே பெரிய இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம் அமெரிக்கா வெளியேறும்பட்சத்தில் அந்த இடத்திற்குச் சீனா வர வாய்ப்புகள் அதிகம். சீனா, ரஷ்யா நாடுகள் கூடுதல் நிதியை வழங்க ஆரம்பிக்கும். இதன் மூலம் சர்வதேச அரசியலை நிர்ணயம் செய்யும் சக்தி இரு நாடுகளுக்கும் வரலாம். குறிப்பாகச் சீனாவின் பங்களிப்பு இப்போது 5 சதவிகிதமாக உள்ள நிலையில், அது தனது பங்களிப்பை அதிகரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நேரத்தில் அமெரிக்காவின் வெளியேற்றம் சீனாவுக்குச் சாதகமாக அமையலாம். இதனால் அமெரிக்கா எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்பு தீவிர ஆலோசனை செய்தே முடிவெடுக்க வேண்டும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.