கிறிக்கெற் உலகின் முதல் உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கு இந்திய அணி வீரர்களில் ஒருவரான பெர்னார்ட் ஜூலியன் , தனது 75-வது வயதில் காலமானார். இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அவரது மறைவு, கிறிக்கெற் உலகை, குறிப்பாக 70-களின் கிறிக்கெற் ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1973 முதல் 1977 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய பெர்னார்ட் ஜூலியன், 24 டெஸ்ட் போட்டிகளிலும், 12 ஒருநாள் போட்டிகளிலும் களமிறங்கியுள்ளார். தனது குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில், அவர் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது.
1975 உலகக் கிண்ண சிற்பி பெர்னார்ட் ஜூலியனின் பெயர் கிறிக்கெற் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்ததற்கு முக்கியக் காரணம், 1975-ல் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி உலகக் கிண்ணம் . அந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சம்பியனாவதற்கு , அவரது ஆல் ரவுண்டர் திறமை ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த உலகக் கிண்ணப் போட்டியின் [போது போது இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய அவர், 20 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அந்த தொடரின் மிக முக்கியமான நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும், தனது பந்துவீச்சில் மிரட்டிய பெர்னார்ட் ஜூலியன், 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், பேட்டிங்கிலும் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தார். 37 பந்துகளைச் சந்தித்து, 26 ஓட்டங்களை சேர்த்தார் பெர்னார்ட் ஜூலியன். 1975 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகின் முதல் கிறிக்கெற் சம்பியனாக முடிசூடியது.
பெர்னார்ட் ஜூலியனின் மறைவுக்கு, அவரது கப்டனும், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவானுமான கிளைவ் லாயிட் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். “அவர் எப்போதுமே 100 சதவீதத்திற்கும் மேலான உழைப்பைக் கொடுப்பார். தனது கடமைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நான் அவரை முழுமையாக நம்பியிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவர் தனது முழு திறனை அணிக்காகக் கொடுத்தார். என்ன ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர்!” என்று கிளைவ் லாயிட் புகழாரம் சூட்டியுள்ளார்.