ஆரோக்கியமான உப்பு மாற்றுகளைத் தேடி சட் ஜிபிடி-யிடம் (Chatgpt) ஆலோசனை கேட்ட ஒருவர், AI வழங்கிய புரோமைடு வேதிப்பொருளை எடுத்துக்கொண்டதன் காரணமாக தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.
ஆரோக்கியமான உப்பு மாற்றுகளைத் தேடி சட்ஜிபிடி-யிடம் ஆலோசனை கேட்ட ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான “சோடியம் புரோமைடு” என்ற நச்சுக் கலவையை பரிந்துரையாக வழங்கியுள்ளது. மேலும், எந்தவித ஆராய்ச்சியுமின்றி அதை 3 மாதங்கள் தொடர்ந்து எடுத்ததால், அவர் கடுமையான புரோமைடு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தூக்கமின்மை மற்றும் பதற்றத்திற்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட புரோமைடு, பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.
இன்று, அது பெரும்பாலும் கால்நடை மருந்துகள் மற்றும் சில தொழில்துறை தயாரிப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. மனிதர்களில் புரோமைடு நச்சுத்தன்மை மிகவும் அரிது. ஆனால், அந்த நபரின் நிலை இதில் விதிவிலக்காக மாறியிருக்கிறது.
சோடியம் புரோமைடு பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களிலேயே, அவர் குழப்பம், சித்தப்பிரமை மற்றும் கடுமையான மனநிலை மாற்றங்களை அனுபவித்துள்ளார்.
தாகம் இருந்தபோதிலும் தண்ணீர் குடிக்க மறுப்பது போன்ற விசித்திரமான நடத்தையையும் அவர் எதிர்கொண்டுள்ளார்.
பின்னர், இந்த நிலை தீவிரமடைந்ததால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் நரம்பு வழியாக திரவங்கள், ஆன்டிசைகோடிக் மருந்துகள் மற்றும் மனநல சிகிச்சைகளை அவருக்கு வழங்கினர். சில நாட்களில் அறிகுறிகள் குறைந்தாலும், அதற்கான காரணம் பின்னரே தெரியவந்தது.
மருத்துவர்கள், சட்ஜிபிடி-யிடம் மீண்டும் அதே கேள்வியை முன்வைத்த போது அதேபோல், மனித நுகர்வுக்கான ஆபத்துகளை எச்சரிக்காமல், ஏஐ மீண்டும் புரோமைடை பரிந்துரைத்துள்ளது.