தற்காலத்தில் வேலைத்தலங்களில் மட்டுமின்றி பாடசாலை மற்றும் வீட்டிலும் கூட நாற்காலியில் இருக்கும் நேரம் அதிகரித்துள்ளது. கூடவே உடல், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரித்துக் காணப்படுகிறது, அதிகரித்த உடல் எடை, நீரிழிவு, இதயநோய், கழுத்து, தோள்பட்டை இறுக்கம், மற்றும் சில வகையான புற்றுநோய்களையும் நீண்ட இருக்கையின் பாதிப்புகளாக கண்டிருக்கிறார்கள். இது மட்டுமின்றி மனஅழுத்தம், பதற்றம் போன்ற மனத்தோடு சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் அவதானிக்கப்பட்டுள்ளன. எமது முதுகுத்தண்டுவட ஆரோக்கியத்துக்கு பொருத்தமற்ற வகையில் எமது இருக்கை அமைவதால், முதுகுவலி, தண்டுவட சில்லுகள் அமுக்கப்படல் (compression of discs) போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன. மனித உடலானது நேராக இருப்பதற்கு என்றே உருவாகி வந்துள்ளது. இருந்தும் பல காரணங்களால் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு நம் இயற்கையான முள்ளந்தண்டுவட வளைவுகளை அனுசரித்துப் போகும் நாற்காலிகளைப் பயன்படுத்துவதால் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

எமது இருக்கை நிலையைக் குறைத்து, இயக்கநிலையை அதிகரிக்க பல உபாயங்கள் உண்டு, இவை ஒன்றும் எமக்குத் தெரியாததல்ல. மோட்டார் வாகன பாவனையைக் குறைத்து துவிச்சக்கர வண்டியை மீண்டும் உபயோகிப்பதன் மூலம் ஆரோக்கியம் மேம்படுவது நமக்கு மட்டுமல்ல, நாம் வாழம் சூழலுக்குந்தான். பொதுப் போக்குவரத்துகளில் பயணப்படும் பொது, நாம் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு முன்பாகவே இறங்கி வீட்டுக்கு நடந்து போகலாம். வேலையில் அதிக நேரம் இருந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி எழுந்து நடப்பது, உடலை தளர்த்தும் பயிற்சிகளைச் செய்வது என்று சிறிய இடைவேளைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நின்ற நிலையில் கணினியுடன் வேலை செய்யக்கூடிய மேசைகள் தற்போது பாவனையில் உள்ளது, இளம் வயதினர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்காமல் பாடசாலை விளையாட்டுகள், யோக ஆசனங்களைப் பயிலுவதன் மூலம் ஆரோக்கியத்தைப் பேணுவதுடன், படிப்பிலும் திறமையை வெளிப்படுத்த முடியும்.
நாற்காலியில் நீண்ட நேரம் இருப்பது உடலுக்கு பல பாதிப்புகளைக் கொண்டு வரும் என்று பார்த்தோம். ஆனால் இருப்பது போல் சிறிது நேரம் பாவனை செய்வது பல நன்மைகளைக் கொண்டு வரும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். யோகாசனத்தில் இதனை உட்கட்டாசனம் என்பர்.



செய்யும் முறை;
- கால்கள் சேர்ந்து இருக்க நிமிர்ந்து கைகள் உடலுக்குப் பக்கத்தில் இருக்க தடாசனத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
- மூச்சை உள்ளே இழுத்தவாறு கைகளை தரைக்கு செங்குத்தாக இருக்குமாறு மேலே தூக்க வேண்டும். தோள்பட்டை தளர்வாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- மூச்சை வெளிவிட்டவாறு முழங்கால்களை மடக்க வேண்டும். இயலுமானவரை மட்டும் தரைக்கு சமாந்தரமாக வரலாம். இந்நிலையில் உடலின் முண்டப்பகுதி கால்களின் தொடைப்பகுதியுடன் 90 பாகை கோணத்தைப் பேணும்.
- கைகளை நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். முதுகுத்தண்டு நீட்டப்பட்ட நிலையை உணர வேண்டும். கழுத்துப்பகுதி முள்ளந்தண்டின் தொடர்ச்சியாக நேர்கோட்டில் இருக்கும்.
- இந்நிலையில் ஆழமான, இயல்பான மூச்சு நிலையை பேண வேண்டும். ஆரம்பத்தில் முடிந்த அளவு நேரம் இருந்து விட்டு, மூச்சை உள்இழுத்தவாறு நிமிர்ந்த நிலைக்கு வந்து, மூச்சை வெளிவிட்டவாறு தடாசனத்துக்கு வரவேண்டும்.
- ஆசனம் முதன்முதலாக செய்பவர்கள் கால்களுக்கிடையில் சிறிது இடைவெளி விட்டு நின்று செய்யலாம்.
- கால்கள் சமாந்தரமாகவும், முள்ளந்தண்டும் ஆசனப்பகுதியும் நேர்கோட்டிலும், உடல் எடையின் பெரும்பகுதி குதிகளிலும் இருப்பது போன்ற நுணுக்கங்களை ஆசனத்தை சரியாகச் செய்து வரும் போது உணரலாம்.
Chair Pose என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டாலும் சக்திவாய்ந்த ஆசனம் என்பதே இதன் பொருள்.
பயன்கள்;
- இந்த ஆசனத்தை சில நிமிடங்கள் செய்வது நீண்ட தூரம் நடப்பதால் கிடைக்கும் பலனைத் தரவல்லது.
- தொடைகள் பலமடைகின்றன.
- முழங்கால்கள் உறுதியடைகின்றன.
- கணுக்கால்கள், இடை, ஆசனப்பகுதி, முள்ளந்தண்டு மற்றும் தோள்பட்டைப் பகுதி உறுதியும் நெகிழ்வுத் தன்மையும் பெறுகிறது.
- சுவாசிக்கும் திறன் மேம்படுகிறது.
- மூட்டு, இடுப்பு, குதிகால் வலிகளைக் குறைக்க முடிகிறது.
- நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுவதோடு, எமது சக்திநிலையும் அதிகரிக்கிறது.
- மன உறுதி அதிகரிக்கிறது.
யாரெல்லாம் செய்யக்கூடாது ; எலும்பு பலவீனமாக உள்ளவர்களும், வயதானவர்களும், உடல் பருமன் மிக அதிகமாக உள்ளவர்களும், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களும் வைத்தியரின் ஆலோசனையின் படி, யோக ஆசிரியர் மூலமாக தங்களால் முடிந்த அளவுக்கு இந்த ஆசனத்தைச் செய்யலாம்.