இஸ்ரேல் ,ஹமாஸ் பணயக்கைதிகள் பரிமாற்றம்
இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கைதிகள்-பணயக்கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாம் கட்டம் சனிக்கிழமை முடிவடைந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சனிக்கிழமை அறிவித்தது.
இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 200 பாலஸ்தீனிய கைதிகள், நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் ஆகியோரும் அடங்குவர். கைதிகள் விடுதலையை சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுத்துவதை நடுநிலை இடைத்தரகரான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறுதிசெய்தது.
முன்னதாக சனிக்கிழமையன்று, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளும் இஸ்ரேல் பாதுகாப்பு முகமையும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், காஸாவில் அடைக்கப்பட்டிருந்த நான்கு பெண் இஸ்ரேலிய சிப்பாய்கள் தங்களுக்கு மாற்றப்பட்டு எல்லையைத் தாண்டி இஸ்ரேலுக்குள் நுழைந்ததாகக் கூறியது.
எகிப்து, கட்டார், அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, 15 மாத கால கடுமையான சண்டைக்குப் பிறகு இஸ்ரேல், ஹமாஸ் ஆகியவற்றுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.