மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் மூன்று கிளாசிக் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இளையராஜாவின் பாடல்களான ‘ஒத்த த ரூபா தரேன்’, ‘இளமை இதோ இதோ’ மற்றும் ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகியவற்றை அவரது அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக அவர் கூறியதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் பாடல்களைப் பயன்படுத்த தன்னிடம் அனுமதி பெறவில்லை என்று கூறி இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார்.அந்த வழக்கில், இது தெளிவான பதிப்புரிமை மீறல் என்று அவர் கூறுகிறார்.
இந்தப் படத்தில் தன்னுடைய பாடல்களை, உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, ₹5 கோடி இழப்பீடு கோரி அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
தனது பாடல்களைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளையராஜா சார்பில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதற்கு, பாடல்களைப் பயன்படுத்த சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் பதிலளித்திருந்தது.
ஆனால், அந்த உரிமையாளர் யார் என்பதைப் பற்றி அவர்கள் தெரிவிக்கவில்லை என்று இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.தற்போது சட்டப்பூர்வமாக விஷயங்கள் சரிசெய்யப்படும் வரை, படத்தில் இந்த பாடல்களில் எதையும் இடம்பெறச் செய்ய கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.