நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தனியார் பஸ்களுடன் கூட்டு நேர அட்டவணையில் பஸ்களை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஐக்கிய சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் சம்பத் பிரேமரத்ன தெரிவித்தார்.
அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு நேர அட்டவணையில் பல சிக்கல்கள் இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே கூட்டு நேர அட்டவணை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், வேலைநிறுத்தம் நியாயமற்றது என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குமார குணசேன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பஸ்கள் வழக்கம் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..