Sunday, April 5, 2026 6:36 am

யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாட்டின் பரவல் பற்றிய ஒரு செவிவழிக்கதை உண்டு. கண்ணகி மதுரையினை எரித்த பின் ஐந்து தலை நாகமாக உருமாறி இலங்கை வந்தாள், அவ்வாறு வரும் போது, முதலில் நயினாதீவில் தங்கினாள் எனவும், பின்பு சுருவில் (வேலணைக்கு அருகேயுள்ள இடம்), வட்டுக்கோட்டை, நவாலி, களையோடை, சுதுமலை, சீரணி, அங்கணாமக்கடவை (கந்தரோடை), அளவெட்டி ஆகிய இடங்களில் அங்கங்கே தங்கி இளைப்பாறி வந்து, முல்லைத்தீவு வற்றாப்பளை எனும் இடத்துக்குச் சென்றாள் என அக் கதையில் கண்ணகியின் செல்லுகை நீண்டு செல்லும்.
இச் செவிவழிக் கதையினைக் கட்டுடைத்துப் பார்த்தால், நாகர் எனும் இனக்குழுவினரால் கண்ணகித் தெய்வ வழிபாடானது வட இலங்கைக்குக்குக் கொண்டு வரப்பட்டதும், முதலில் நயினாதீவிலும் (நயினை நாகபூசணி அம்மன் கோயில்) பின்னர் ஒவ்வொரு இடத்திலும் கோயில்கள் (கோட்டங்கள்) அமைக்கப்பட்டிருந்த செய்தியும் தெரியவரும். இங்கு குறிப்பிடப்படும் ஒவ்வொரு இடத்திலும் கண்ணகி அம்மன் கோயில்கள் இருந்தமைக்கான சான்றுகளை இன்றும் காணலாம். கதையின் படி, வழுக்கியாற்றின் வழி சென்ற கண்ணகியின் வழித்தடங்களிலுள்ள சில இடங்களில் இன்று கண்ணகி அம்மன் கோயில் இல்லாத போதும் (உரு மாறி இருக்கலாம்) பல இடங்களில் கண்ணகி அம்மன் கோயில்களைக் காணலாம். இந்த வகையில் பத்தாவது இடத்தில் கண்ணகி தங்கிய இடமே வற்றாப்பளை (பத்தாவது பளை > பத்தாப்பளை > வற்றாப்பளை) என்றும் சொல்வர். வற்றாப்பளையில் இன்றும் புகழ் பெற்ற ‘வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்’ இருப்பது தெரிந்ததே!
சேரளத்தில் இருந்து கயவாகு கொண்டு வந்த கண்ணகி வழிபாடு போன்றே, அதற்குப் பிற்பட்ட காலத்தில் மற்றொரு வகையான கண்ணகி வழிபாடு பாண்டி நாட்டிலிருந்து வந்ததாகவும் அறிஞர் கூறுகின்றனர். முன்னையது (கயவாகு கொண்டு வந்தது) தேரவாத பவுத்தத்துடன் கலந்து போக, பின்னையது மகாசன பவுத்தம் – சிவநெறி என்பவற்றுடன் பிற்காலத்தில் கலந்து போயின. வடக்கு, தெற்கு என்பவற்றினை விட கிழக்கிலங்கையில் இன்றும் உயிர்ப்புடன் கண்ணகி வழிபாடு உண்டு. எனவே ஏதோ ஒரு வடிவில் இலங்கைத்தீவு எங்கும் கண்ணகித் தொன்மம் நிலைத்து நிற்கின்றது.

