Saturday, September 6, 2025 6:10 am
வானில் செப்டெம்பர் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் கண்கவர் ‘இரத்த நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவரும், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்தார்.
செப்டெம்பர் 07 ஆம் திகதி இரவு 11.01 மணி முதல் 8 ஆம் திகதி அதிகாலை 12.22 மணி வரை அதாவது 82 நிமிடங்கள் முழு சந்திர கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.
செப்டெம்பர் 07 ஆம் திகதி பகுதி கிரகணம் – இரவு 9:57 இற்கு ஆரம்பமாகி, முழுமையான கிரகணம் – இரவு 11:01 இற்கும், அதிகபட்ச கிரகணம் – நள்ளிரவு 11:42 இற்கும், செப்டம்பர் 8 ஆம் திகதி கங்கண கிரகண முடிவு – அதிகாலை 12:22 இற்கும், பகுதி கிரகண முடிவு – அதிகாலை 1:26 இற்கும், கிரகண முடிவு அதிகாலை 2:25 இற்கும் நிகழுமென வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திர கிரகணம் உலக மக்கள்தொகையில் சுமார் 77 சதவீதத்தினருக்கு முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தெளிவாக அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்வதாலும், பூமியின் இருண்ட நிழல் வழியாக சந்திரன் கடந்து செல்வதாலும் சந்திரன் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் இருட்டாக இருக்கும் என பேராசிரியர் சந்தன ஜெயரத்ன சுட்டிகாட்டியுள்ளார்.
2028 ஆம் ஆண்டு வரை இலங்கையர்களுக்கு இதுபோன்ற முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு கிடைக்காது எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு அரிய நிகழ்வைப் பயன்படுத்தி பாடசாலை மட்டத்தில் இரவு வான கண்காணிப்பு முகாம்களை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
