சமூக ஒழுக்கங்களும் தன்னொழுக்கங்களும்.
எட்டு அங்கங்களையுடைய அட்டாங்க யோகமானது திருமூலரின் திருமந்திரத்தில் விரிவான பாடல்கள் மூலமாகவும், பதஞ்சலி முனிவரால் சிறிய சூத்திரங்களாகவும், யோக சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதி என்பன இந்த எட்டு அங்கங்கள்.
மனிதன் தன் இறைத்தன்மையை உணர்ந்து கொள்ள எவற்றைத் தவிர்த்து எவற்றைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே இயமநியமங்கள்.
இயமம்
இயமம், சமுதாயத்தில் எவ்வாறு நாம் ஒழுக்கமாக இருப்பது அல்லது முறையற்றவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதற்கான வழிகளைக் கூறுகிறது. அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை ஆகிய ஐந்தும் இயமம் என்று யோக சூத்திரத்தில் கூறப்பட, திருமூலர் தன் திருமத்திரத்தில் மேலும் ஐந்தைச் சேர்த்துக் கூறுகிறார்.
கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துஉண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே திருமந்திரம்-554
கொல்லாமை, பொய் கூறாமை, பிறர் பொருள் திருடாமை, எதையும் எண்ணிப் பார்த்து ஆராய்ந்து அறியும் குணம், நற்பண்புகள், அடக்கமுடைமை, நடுநிலை தவறாமை, பிறர்க்கு பகிர்ந்து உண்ணல், மனதில் குற்றம் இல்லாமை, கள்காமம் போன்ற பழக்கங்களைத் தவிர்த்தல் எனும் பண்புகளால் இயமத்தில் நின்று இமயமாகலாம்.
அகிம்சை: கொலை மட்டுமின்றி மனம், வாக்கு, காயத்தால் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது. ஆணவ நிலையில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றவர்களை மட்டுமின்றி நம்மையும் பாதிக்கின்றது. காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கையின் பலனை நாம் அறிவோம்.
சத்தியம் : உண்மையைக் கண்டு தெளிந்து ஆராய்ந்து உரைத்தல், பணிவாக உரைத்தல் எமது ஆன்மார்த்தமான வாழ்வுக்கு முக்கியமானது. உண்மையென்று வாசித்த, கேட்ட, பகிர்ந்த பல செய்திகள் பொய்யாகிப் போவதை நாம் கண்டிருக்கிறோம்.
திருடாமை : மற்றவர்களின் உடைமைகள், உழைப்பு, நேரம் போன்றவற்றை அவர்களின் அனுமதியின்றி எடுத்துக் கொள்ளாதிருக்கும் பண்பு.
பிரமச்சரியம் : ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லற தர்மத்தை கடைப்பிடிப்பது மட்டுமின்றி, எமது புலன்கள் வழியாக நுகரும் எதையும் அளவோடு, வைத்துக் கொள்ளும் போது, பிராண சக்தி இருப்பை அதிகரித்து அதனை முடிவில்லாத அந்த பிரம்மத்தை நோக்கிய தேடலிற்கு உதவச் செய்யலாம்.
பேராசையின்மை : அளவுக்கு அதிகமான ஆசை துன்பத்திலேயே முடியும். பல மக்கள் அடிப்படை வசதியின்றி இருக்கும் இக்காலத்தில், உதவுவதன் மூலம் அவர்களை சமூகத்தில் மேலுயர்த்துவது மட்டுமின்றி, சீவகாருண்யத்தால் எம்மை உணரும் ஆன்ம பயணம் வலுப்பெறும்.
நியமம்
ஐந்து நியமங்களாக மனத்தூய்மை, மனநிறைவால் வரும் சந்தோசம், தன்னறிவும் ஆன்மீக நூலறிவும், தவம் மற்றும் இறைபக்தியில் சரணடைதல் என்பன பதஞ்சலி முனிவரால் கூறப்பட்டுள்ளன.
தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே .திருமந்திரம் – 557.
தவம், செபம், மகிழ்ச்சி, கடவுள் நம்பிக்கை, பிறருக்கு உதவுவது, சிவவிரதம், சித்தாந்த அறிவு, வேள்வி, சிவபூசை, சோதி வழிபாடு எனும் பத்தும் திருமூலரால் கூறப்பட்டுள்ளன.
மனத்தூய்மை: எமது சொல், செயல் யாவும் மனதால் ஆராய்ந்து பார்த்துச் செய்யும் போது மனத்தூய்மை மட்டுமின்றி அதன் காரணமாக உடலும் ஆரோக்கியமாகிறது. மற்றவர்களைக் காயப்படுத்தும் செயல்களில் இருந்து விடுபட்டு, எமது காயத்தை மேன்மைப்படுத்தும் வழி இது.
மனநிறைவு: மனநிறைவினால் கிடைக்கும் ஆனந்தம் எல்லோரும் அடையக்கூடியது தான். நாம் பிரச்சனை என்று கருதி துன்பப்படுவதற்குக் காரணம் இறந்த, எதிர் காலங்களில் மனதை அதிக நேரம் செலவிடுவது தான்.. முதலில் எமது நிலையை நாம் ஏற்றுக்கொண்டு, நிகழ்காலத்தில் இருந்து அணுகி, தீர்வு காண முற்பட வேண்டும். எதிர்மறை உணர்வு ஏற்படும் போது, அதற்கு எதிரான நேர்மறை எண்ணத்தை மனதில் பயிற்சி செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து நீங்கி விடலாம்..
தன்னறிவும் ஆன்மீக நூலறிவும்: ஆன்மீக நூல்களைப் படிப்பதுடன் நிற்காது அதன் வழி நடந்து தன்னை உணரவும் அந்த அறிவை பிரயோகிக்க வேண்டும். இதன் மூலம் சமூகநீதி மேம்படும்.
தவம்: ஒழுக்கமும் விடாமுயற்சியும், பொறிபுலன்களை அடக்கி கடவுள் சிந்தனையில் இருப்பதும்,. தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்து, பிறவுயிர்க்கு துன்பம் செய்யாதிருத்தலும், தவம் எனப்படுகிறது. .
பகைவரை அடக்கி, நண்பரை உயர்வடையச் செய்வதும் தவத்தின் வலிமையால் நினைத்த அளவில் முடியும் என்கிறார் திருவள்ளுவர். மேலும் விரும்பியவற்றை அடைதல், தவ வலிமையால் மெய்யுணர்வு மிகுதல், மற்ற உயிர்கள் தொழுதல், இயமனை வெல்லுதல் என தவத்தின் பயன்களை பட்டியலிடுகிறார் திருக்குறளில்.
இறைபக்தியில் சரணடைதல்: சகலருக்கும் பொதுவான அந்த இறைவனிடம் பூரணமாக சரணடைவது, இயமநியமங்களைப் பின் பற்றுவதன் மூலம் சுலபமாகிறது. அந்த அண்ட ஆற்றலுடன் இணையும் சமாதி நிலை கைகூடுகிறது. ‘எல்லாம் அவன் செயல்’ என்றிருக்க, நாம் செய்வது எதுவுமில்லை என்றாகிறது.
இயமநியமங்களின் வழி நிற்றலால் தன்னை உணர்வது மட்டுமின்றி, வாழ்வின் அன்றாட சவால்களையும் திறம்பட வென்று, சமூகத்துக்கும் ஒரு வழிகாட்டியாக வாழ முடியும்.