இந்தியாவில் தஞ்சமடைந்து நாடு திரும்பிய அகதிகள் மறுவாழ்வு தொடர்பில் ஏராளமான கேள்விகள் தொடரும் நிலையில், தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் நாடு திரும்ப வேண்டும் என்று அனுர குமார திசநாயக்க அரசு கருதுவதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது சம்பந்தமான் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சனிக்கிழமை (22 ) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஒபர் சிலோன் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் செல்வி சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் அந்த கூட்டத்தில் விவரித்தார்.
இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர். தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.
இந்தக் கலந்துரையாடலில் ஒபர் சிலோன் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.