மெல்போர் பூங்காவில் இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இரண்டு முறை நடப்பு சம்பியனான அரினா சபலெங்காவை 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்திய மேடிசன் கீஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சனிக்கிழமை வென்றார். அவரது அவுஸ்திரேலிய ஓபன் வெற்றி அவரது 46வது கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும்.
கீஸ் 1995 இல் இல்லினாய்ஸின் ராக் தீவில் ரிக் , கிறிஸ்டின் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவரது தந்தை அகஸ்டானா கல்லூரியில் பிரிவு III கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடினார்.அவரது தாயார் ஒரு வழக்கறிஞர்.
நான்கு வயதில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்த கீஸ், 2009 இல் தனது 14 வயதில் தனது தொழில்முறை அறிமுகமானார். 2010 இல் ITF சர்க்யூட்டில் தனது முதல் பட்டத்தை வென்றார்,2012 இல் மேலும் இரண்டு பட்டங்களைச் சேர்த்தார்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் செக் நாட்டைச் சேர்ந்த பெட்ரா க்விடோவாவிடம் மூன்று செட்களில் தோற்று வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.
கீஸ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை 2017 US ஓபனில் அடைந்தார், நேர் செட்களில் சகநாட்டவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸிடம் வீழ்ந்தார்.