2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் திகதி ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியில் நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். அவரும் அவரது பாதுகாப்பு குழுவும் திடீரென திரையரங்கில் நுழைந்ததால், கூட்டம் கட்டுப்பாடின்றி திரண்டது. இதில் ஏற்பட்ட நெரிசலில் 39 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்; அவரது மகன் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்பு குழு, மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பி.என்.எஸ் சட்டத்தின் 105, 118(1) மற்றும் 3(5) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொலிஸாரால் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். “நடிகர் வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தரப்படாததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை; இதுவே கூட்ட நெரிசலுக்கு காரணம்” என பொலிஸார் தெரிவித்தனர்
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் அணியின் வெற்றி பேரணிக்காக கிட்டத்தட்ட 2.5 இலட்சம் பேர் திரண்டனர். கூட்ட நிர்வாகக் குறைபாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாமை ஆகியவற்றால் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பெங்களூரு போலீசார் RCB பிராஞ்சைஸ், கர்நாடகா கிரிக்கெட் சங்கம் , நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திய DNA Entertainment ஆகியவற்றுக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், RCB வீரர்கள், குறிப்பாக விராட் கோலி மீது எந்தவிதமான குற்றப்பத்திரிகையும் பதிவு செய்யப்படவில்லை. சமூக ஊடகங்களில் #ArrestKohli என டிரெண்ட் ஆனாலும் “நிகழ்ச்சி நிர்வாக பொறுப்பு அமைப்புகளுக்கு மட்டுமே சட்டபூர்வ நடவடிக்கை” என பொலிஸார் தெரிவித்தனர்