அரச உத்தியோகத்தர்களுக்கு நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு, ஓய்வூதிய முரண்பாடுகளை மூன்று வருடங்களுக்குள் தீர்த்து வைப்பதற்கான முன்மொழிவுகள் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும். அரச சேவையில் தற்போதுள்ள சுமார் 30,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அவசரத் தேவை உள்ளது. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இந்த முயற்சிக்கு தேவையான நிதியை ஒதுக்குவதுபற்றி கலந்துரையாடப்பட்டது என்று அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில்கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுராதபுரத்தை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு “சிட்டி பிராண்டிங்” அணுகுமுறையை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கணிசமான எண்ணிக்கையிலான உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த நகரம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் சிறந்த ஆற்றலைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்டது. இலங்கையின் முதல் இராச்சியத்தின் தளம் , முதல் நீர்த்தேக்கத்தின் இருப்பிடம் என்ற வகையில், நகரத்தின் வரலாறு, கலாச்சார முக்கியத்துவத்தை உலகளவில் மேலும் மேம்படுத்த முடியும் என்றார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் யானை மனித மோதல் உட்பட பல துறைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.