Tuesday, September 9, 2025 11:21 am
வன்முறை ஊழலுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.
“பிரதமர் பதவி விலகிவிட்டார்,” என்று அவரது உதவியாளர் பிரகாஷ் சில்வால் செவ்வாயன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
சமூக ஊடகத் தடையால் தூண்டப்பட்ட வன்முறைப் போராட்டங்களில் 19 பேர் இறந்த ஒரு நாளுக்குப் பிறகு, காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறி பொலிஸாருடன் மோதியதை அடுத்து ஓலி வெளியேறியுள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டன. இதனால் கோபமான இளம் வயதினர் நேற்று காத்மாண்டுவில் போராட்டத்தை தொடங்கினர். இது வன்முறையானது. இதையடுத்து சமூக வலைதளங்களுக்கான தடை நீக்கப்பட்டது. இருப்பினும் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 2வது நாளாக இளம் வயதினர் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் தொடர்பு துறை அமைச்சரும், அரசின் செய்தி தொடர்பாளருமான பிரித்வி சுப்பா குரங்கின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. அதேபோல் சிபிஎன் மாவோயிஸ்ட் சென்டரின் தலைவர் புஷ்பா கமல் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. ஜானக்பூரில் உள்ள முன்னாள் துணை பிரதமர் ரகுவீர் மகாசேத்தின் வீட்டில் கல் வீசப்பட்டது. அதேபோல் நேபாள் காங்கிரஸ் தலைவர் செர் பகதூர் தியூபா வீடு, நயா பஜாரில் உள்ள கிர்திபூர் மாநகராட்சி அலுவலகம், நேற்று ராஜினாமா செய்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேலாக் ஆகியோரின் வீட்டில் தீவைத்து எரிக்கப்பட்டது. அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேலாக் ராஜினாமா செய்த நிலையில் 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இன்று விவசாயத்துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார். சுகாதாரத்துறை அமைச்சர் பிரதிப் பால்டெல் ராஜினாமா செய்தார். இதனால் நேபாளத்தின் நிலைமை எல்லை மீறி சென்றுள்ளது. அங்குள்ள நிலைமையை பார்த்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.

