அமெரிக்க கிரிக்கெட் உறுப்பினர் பதவியை ஐசிசி நிறுத்தியது.
“இந்த இடைநீக்கம் ஒரு துரதிர்ஷ்டவசமான ஆனால் விளையாட்டின் நீண்டகால நலன்களைப் பாதுகாக்க அவசியமான நடவடிக்கை” என்று ஐ.சி.சி கூறுகிறது.
ஒரு வருட கால மறுஆய்வு,பங்குதாரர்களுடனான ஆலோசனைகளுக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அமெரிக்க கிரிக்கெட்டின் உறுப்பினர் பதவியை உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.
ஐசிசி அரசியலமைப்பை யுஎஸ்ஏ கிரிக்கெட் மீண்டும் மீண்டும் மீறுவதாகக் கூறி, ஐசிசி அதன் சமீபத்திய கூட்டத்தில் இந்த முடிவை எட்டியது.
செயல்பாட்டு நிர்வாக கட்டமைப்பை நிறுவத் தவறியது, அமெரிக்க ஒலிம்பிக் , பராலிம்பிக் கமிட்டியிடமிருந்து (USOPC) தேசிய நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்தைப் பெறுவதில் போதுமான முன்னேற்றம் இல்லாதது, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் கிரிக்கெட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை ஆகியவை இந்த மீறல்களில் அடங்கும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
“இந்த இடைநீக்கம் ஒரு துரதிர்ஷ்டவசமான ஆனால் விளையாட்டின் நீண்டகால நலன்களைப் பாதுகாக்க அவசியமான நடவடிக்கை” என்று ஐ.சி.சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளுக்கான (LA28) தயாரிப்புகள் உட்பட, ஐ.சி.சி நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையை அமெரிக்க கிரிக்கெட்டின் தேசிய அணிகள் தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, ஐ.சி.சி ,அதன் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் அமெரிக்காவின் தேசிய அணிகளின் மேலாண்மையையும், நிர்வாகத்தையும் தற்காலிகமாக மேற்பார்வையிடுவார்கள்.