வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமாரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைக்கப்படும் குழாய்க்கிணறுகள் தான்தோன்றித்தனமாக அமைவதால் பிரதேசத்தில் காணப்படுகின்ற நன்னீர்க் கிணறுகள் பாதிப்படையச் செய்யும் செயற்பாடாக காணப்படுவதாகவும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழாய்க்கிணறுகளை அமைக்கவுள்ளவர்கள் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து அவர்களது சிபார்சிற்கு அமைவாக பிரதேச சபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.