Tuesday, February 4, 2025 7:36 am
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் விமர்சனங்களுக்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜனநாயகச் சூழலில் ஒரு சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் பிரதிநிதிகள் மீது விமர்சனங்கள் வருவது வழமை. சிவில் சமூக அமைப்புகள் மீதும் விமர்சனங்கள் – சந்தேகங்கள் எழுவதும் வழமை.
இவை திருத்தங்கள் – மாற்றங்கள் – மாற்றுச் சிந்தனைகளை நோக்கியதாக அமையும் என்கிறார் பத்திரிகையாளர் அ.நிக்ஸன்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகளுக்கு சேவகம் செய்வோரை மக்கள் பிரதிநிதிகள் என்று வரையறை செய்ய முடியாது. மாறாக, அவர்கள் அரச முகவர்கள்.
அதாவது, ஈழத்தமிழ் இனத்தின் அரசியல் அபிலாஷைகளை கொச்சைப்படுத்தி மலினப்படுத்தி நகைச்சுவையாக்கி விட்டால், தமிழ்த்தேசியம் என்ற கோட்பாடு அழிந்து விடும் அல்லது குறைந்த பட்சம் மறைந்துவிடும் என்று கொழும்பு நிர்வாகம் 1920 இல் இருந்து நம்புகிறது. இது வரலாறு.
அதாவது, இந்த நம்பிக்கை பண்டா, டட்லி மற்றும் ஜேஆர்.ஜயவர்த்தனாவில் இருந்து இன்றைய அநுரகுமார திஸாநாயக்க வரை ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையைக் கொச்சைப்படுத்தும் கைங்கரியங்கள் அந்தந்தக் காலப் பகுதிகளுக்கு ஏற்றமாதிரி கையாளப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த உண்மையை சாதாரண தமிழ் மக்களில் பலரும் புரிந்து கொண்டதாக இல்லை. அநுரகுமாரவை நல்லவர் என்றும் அவருடைய அரசாங்கத்தைப் பாராட்டுவதையும் பலர் தமிழ்த் தேசிய கடமையாகக் கருதுகின்றனர்.
ஆனால், மறுபுறம் தமிழ் இனத்தின் சுயமரியாதை அடகுவைக்கப்பட்டுள்ளது என்ற ஆபத்தை அவர்கள் ஏற்க மறுக்கின்றனரா அல்லது தமிழ்த் தேசியக் கட்சிகள் மீதான வெறுப்பில் இப்படி செயற்படுகின்றனரா என்பது புரியவில்லை.
அதேநேரம், டொனால்ட் ட்ரம் ஒரு அரசியல் கோமாளி என்று நியுயோர்க் ரைம்ஸ் நாளிதழ் கூட விமர்சித்திருக்கிறது. வேறு ஐரோப்பிய ஊடகங்களும் ஏன் வெள்ளைக்காரச் சமூகத்தின் சமூகவலைத் தளங்கள் பலவும் அவ்வாறுதான் விமர்சிக்கின்றன.
ஆனால், அமெரிக்கர்கள் ட்ரம்புக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர். ஆகவே, வாக்களித்த அமெரிக்க மக்கள் முட்டாள்கள் என்று அர்த்தப்படுத்த முடியாது.
ஒரு நம்பிக்கையில் அவர்கள் வாக்களித்திருக்கலாம். அல்லது ஜனநாயக கட்சியின் மீதான வெறுப்பிலும் ட்ரம்புக்கு வாக்களித்திருக்கலாம். ஆனால், அமெரிக்கா என்பது பெரும் வல்லரசு. அங்கு அரசியல் பிரதிநிதிகள் ஒரு எல்லைக்கு மேல் தாங்கள் நினைத்தபாட்டிற்கு ஆட முடியாது.
ஆனால், சிறிய தீவான இலங்கையில் அப்படியல்ல. 1948 இல் இருந்து காலத்துக்காலம் ஜனநாயகம் என்ற போர்வையில் மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவாகும் சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தாம் நினைத்தபாட்டிற்கு செயற்பட்டதன் விளைவுகள் தான் இன்றைய அவல நிலைமைகளுக்குக் காரணம்.
இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கோட்பாட்டில் 1920 இலிருந்து இன்றைய அநுரகுமார வரை அவர்கள் ஒரே புள்ளியில் நின்றார்கள்.
ஆனால், முப்பது வருட போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவோரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் இன்று தமிழ்ச் சமூகத்தை தலைகுனிய வைத்திருக்கிறன.
அதுவும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவான ஊசியும், ஜேவிபியின் யாழ்ப்பாண பிரதிநிதிகளும் எந்த இடத்தில் எப்படி பேசுவது என்ற நாகரிகம் தெரியாமல் வாயில் வருவதை வாந்தி எடுக்கின்றனர். இந்த வாந்தி தமிழர்களுக்கு எதிராகப் பின்னப்பட்ட சதிக் கோட்பாட்டின் மற்றொரு வடிவம்.
இச் சதிக் கோட்டில் தாங்கள் ஏன் பயன்படுத்தப்படுகிறோம் என்பதைக்கூட இந்த தமிழ்ப் பிரதிநிதிகள் என்று கூறுவோர் உணர்ந்து கொண்டதாக கூற இயலாது. அல்லது தெரிந்து கொண்டே சமூகத்தை நாசமாக்கின்றனர் என்ற முடிவுக்கும் வரலாம் என்றார்.