நாகர்கோவில் இளைஞர்கள் இணைந்து நடாத்திய வடமாகாண ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிபோட்டிகள் நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் சாவற்கட்டு பிள்ளையார் அணி, நாகர்கோவில் சிறகுகள் அணி, மாலைசந்தி மைக்கல் அணி, நவிண்டில் ஸ்டார் அணி ஆகியன மோதிக்கொண்டன.
இதில் நவிண்டில் ஸ்டார் அணியை எதிர்த்து மோதிய நாகர்கோவில் சிறகுகள் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியதுடன், மாலைசந்தி மைக்கல் அணியை எதிர்த்து மோதிய சாவற்கட்டு பிள்ளையார் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாவற்கட்டு பிள்ளையார் அணி மற்றும் நாகர்கோவில் சிறகுகள் அணி என்பன நேருக்குநேர் மோதிக்கொண்டன. இரு அணிகளும் பலம்பொருந்திய அணிகள் என்பதனால் போட்டி நிமிடங்கள் சூடுபிடித்தன. ஆட்டத்தின் முடிவில் சாவற்கட்டு பிள்ளையார் அணி வெற்றிபெற்று வெற்றி மகுடத்தினை தனதாக்கியது.
இந்நிலையில், சாவற்கட்டு பிள்ளையார் அணி முதலாமிடத்தினையும், நாகர்கோவில் சிறகுகள் அணி இரண்டாமிடத்தினையும், மாலைசந்தி மைக்கல் அணி மூன்றாமிடத்தினையும், நவிண்டில் ஸ்டார் அணி நான்காமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.
வடமாகாண ரீதியில் பலம்பொருந்திய 22 இற்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


