லிபியா கடற்கரையில் வார இறுதியில் ஏற்பட்ட இரண்டு தனித்தனி படகு விபத்துகளில் கிட்டத்தட்ட 100 சூடான் அகதிகள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஐ.நா. நிறுவனங்கள் புதன்கிழமைதெரிவித்தன.
சனிக்கிழமை ஒரு படகு கவிழ்ந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை கிழக்கு நகரமான டோப்ரூக் அருகே மற்றொரு படகு தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. உயிர் பிழைத்தவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர், பெரும்பாலானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
முதல் படகில் 74 பேர் பயணம் செய்தனர், அவர்களில் “பெரும்பாலும் சூடானிய அகதிகள்” என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் லிபியாவிற்கான அதன் X கணக்கில் கூறியது, அவர்களில் சனிக்கிழமை விபத்தில் “13 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர், பலர் காணாமல் போயுள்ளனர்”.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 75 சூடான் அகதிகளை ஏற்றிச் சென்ற ரப்பர் படகு கிரேக்கத்திற்குச் செல்லும் வழியில் தீப்பிடித்தபோது சுமார் 50 பேர் பலியானதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்புசெய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.படகுகளில் இருந்தவர்களின் வயது அல்லது பாலினம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஜனவரி 1 முதல் செப்டம்பர் 13 வரை மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் குறைந்தது 456 பேர் இறந்ததாகவும், 420 பேர் காணாமல் போனதாகவும் சர்வதேச இடம் பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை லிபியாவிற்குள் நுழைந்த 17,402 குடியேறிகளை லிபிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர், இதில் 1,516 பெண்களும், 586 குழந்தைகளும் அடங்குவர்.
