மூளையை உண்ணும் அமீபா என அழைக்கப்படும் நெக்லேரியா ஃபௌலேரி (Naegleria fowleri) என்ற அரிய வகை நோய்த்தொற்று, கேரளாவில் அதிகரித்து வருகிறது.
இந்த ஒற்றை செல் உயிரினம், அசுத்தமான நீரில் மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து, மூளையை உண்ணும் மெனிங்கோஎன்செபலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis-PAM) என்ற உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது.
இந்த ஆண்டு மட்டும், கேரளாவில் 70 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்த்தொற்று, மூளையின் திசுக்களை வேகமாக அழித்து, உலகளவில் 95% உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
கேரளாவில் 55 லட்சம் கிணறுகள் மற்றும் 55 ஆயிரம் குளங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் குடிநீர் மற்றும் குளிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
காலநிலை மாற்றத்தினால் வெப்பம் அதிகரிப்பது, இந்த அமீபா வளர்வதற்குச் சாதகமான சூழலை உருவாக்குகிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.