பிரான்சில் பணியாளர் பற்றாக்குறை, பழைய தொழில்நுட்பம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்கும்படி பிரான்ஸ் விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
ஐரோப்பாவிற்கான லொபி குழு ஏர்லைன்ஸ், இரண்டு நாட்களில் 1,500 இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்படும் என்றும், இதனால் கிட்டத்தட்ட 300,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களின் செயல்பாடுகளைப் பாதித்தது.
இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் 468 விமானங்களை இரத்து செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.
இதுதொடர்பாக ரியான் ஏர் விமான போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதனால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30,000 இற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.