சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது என கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
அதேவேளை, நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் கூட்டுத்தாபனம் தற்போது இலாபமீட்டி வருவதால் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை மூட வேண்டிய அவசியம் கிடையாது என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தை நாம், பொறுப்பேற்கும்போது கடற்றொழில் கூட்டுத்தாபனம் 1700 மில்லியன் ரூபா கடனை எதிர்கொண்டிருந்தது.
மீன் வர்த்தகர்களுக்கு 700 மில்லியன் ரூபாவை கூட்டுத்தாபனம் செலுத்த வேண்டியுள்ளது. ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியும் முறையாக செலுத்தப்படவில்லை.
கூட்டுத்தாபனம் எதிர்கொண்டிருந்த கடன் மற்றும் நிதி நெருக்கடிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இதற்கமைய கூட்டுத்தாபனம் கடந்த ஜூலை மாதம் 3 மில்லியன் ரூபா,ஓகஸ்ட் மாதம் 10 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் வருமானத்தை பெற்று வருகிறது.நெருக்கடிகளுக்கு முறையாக தீர்வு காணும் பின்னணியில்தான், கூட்டுத்தாபனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஒரு தரப்பினர் போலியான செய்தியை பரப்பியுள்ளார்கள். கூட்டுத்தாபனத்தை மூட வேண்டிய அவசியம் தற்போது கிடையாது. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.