தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் விழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கும் அறிவிப்பை விடுத்திருந்த யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியம் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் மேற்கொண்டு ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
அகில இலங்கை தமிழ் காங்கிரசுடன் யாழ் முஸ்லிம் மக்களுக்கு நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்து வருகின்றது.
அதுமட்டுமல்லாது கொள்கையில் தடுமாறா நிலையுடன் பயணிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி எமது மக்களின் நலன்களில் அதிக அக்கறையுடன் பயணித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப கொள்கையுடன் தமிழ் தேசிய பேரவை இருக்கின்றது.
அதனடிப்படையில் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலில் எமது அமைப்பின் ஆதரவை தமிழ் தேசிய பேரவைக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர் தமது முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு ஆதரவை வழங்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஊடக சந்திப்பின் போது யாழ்.முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆ.ளு.ரஹீம் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.