Thursday, September 25, 2025 7:02 am
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இடையேயான இருதரப்பு கலந்துரையாடல்கள் நேற்று (24) பிற்பகல் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தில் நடைபெற்றன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை சிறப்பாக வரவேற்ற நிலையில், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
அதேபோல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி எல்பனீஸுக்கு இடையேயான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றும் நேற்று (24) பிற்பகல் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தில் நடைபெற்றன.
இதற்கிடையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் போர்த்துகீசிய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா இடையேயான இருதரப்பு கலந்துரையாடல்கள் பிற்பகல் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தில் நடைபெற்றன.
இந்த சந்திப்புகளின் போது, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூர்யா மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.
இதற்கிடையில், இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டெரெஸ் இடையே ஒரு சந்திப்பும் நடைபெறவுள்ளது.