Sunday, April 12, 2026 5:50 pm
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே இன்று ஏப்ரல் 12 ஆம் திகதி உடல் நடக்குறைவால் காலமானார். அவரது இறப்பு இந்திய திரையுலகிற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இந்திய அரசின் உயரிய விருதான பத்மவிபூஷன் முதல் கின்னஸ் சாதனை என பின்னணி பாடகியாக பல்வேறு சாதனைகளை படைத்தவர் .
2011 ஆம் ஆண்டு ஆஷா போஸ்லேவின் பெயர் உலக கின்னஸ் சாதனையாளர்களின் பட்டியலில் இடம்பெற்றது. 1943 முதல் 2026 வரை கடந்த 80 ஆண்டுகளில் இந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒரியா, பஞ்சாபி, நேபாளி ,ஆங்கிலம் உள்ளிட்ட 20 மொழிகளில் 12 ஆயிரம் பாடல்களை பாடி உலகில் அதிக பாடல்களை பாடிய பாடகர் என்கிற பெருமைக்குரியவர் ஆஷா போஸ்லே. ஒரு நாளில் அதிகபட்சமாக 28 பாடல்களுக்கு ரெக்கார்டிங் செய்துள்ளார்.
இரண்டு தேசிய விருதுகள் , 7 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். 18 முறை மகாராஷ்டிர மாநில அரசால் வழங்கப்படும் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை வென்றுள்ளார். ஆஷா போஸ்லேவின் திரைப்பணியை கெளரவிக்கும் விதமாக இந்திய அரசு அவருக்கு 1997 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருதும் , 2000 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதும் , 2008 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருதும் வழங்கியது.
கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சனிக்கிழமை ஏப்ரல் 11 ஆம் தேதி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இன்று ஏப்ரல் 12 ஆம் திதி சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அவரது மகன் ஆனந்த் தெரிவித்தார். அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெற உள்ளன.
பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே, இந்திய இசையுலகின் ஒரு பெரும் ஆளுமை. அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களில் தமிழ் மொழியில் அவர் பாடிய பாடல்கள் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், அவை ஒவ்வொன்றும் முத்திரை பதித்தவை. குறிப்பாக இசைஞானி இளையராஜாவுடன் அவர் இணைந்து பணியாற்றிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான பட்டியலில் உள்ளன.
இளையராஜாவின் இசையில் உருவான செண்பகமே செண்பகமே பாடலை தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாது. எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் ஆஷா போஸ்லேயின் தமிழ் உச்சரிப்பு மற்றும் மெல்லிய குரல் இனிமைக்கு ஒரு சிறந்த உதாரணம். கிராமிய மெட்டும் மேற்கத்திய பாணியும் கலந்த இந்தப் பாடலில் அவர் காட்டியிருக்கும் உணர்ச்சிகள் அபாரம்.
புதுப்பாட்டு என்ற ராமராஜன் படத்தில் இடம் பெற்ற எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிற பாடலை மறக்க முடியாது. இளையராஜாவுடன் இணைந்து ரொம்ப அழகாகப் பாடியிருப்பார் ஆஷா போஸ்லே. மீரா படத்திலும் ஆஷாவை வைத்து அழகான இரு பாடல்களை இழைத்திருப்பார் ராஜா.
மெலடி ராணியாக வலம் வந்து கொண்டிருந்த ஆஷா போஸ்லேவை, சேதுபதி ஐபிஎஸ் படத்தில் இடம் பெற்ற சாத்து நட சாத்து பாடல் மூலம் ஹஸ்கி ராணியாக மாற்றி மாஜிக் செய்தவர் ராஜா.
ஹேராம் படத்தில் இடம் பெற்ற நீ பார்த்த பார்வை இன்னொரு அட்டகாசமான பாடல். கமல்ஹாசன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல் ஒரு காலத்தால் அழியாத காவியம். ஆஷா போஸ்லேயும் ஹரிஹரனும் இணைந்து பாடிய இந்தப் பாடல், மிகவும் நுணுக்கமான உணர்வுகளைக் கொண்டது.
பின்னர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இருவர், அலைபாயுதே ஆகிய படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் போஸ்லே.
தேவா இசையிலும் போஸ்லேவின் தேன் குரல் ஒலித்துள்ளது. நேருக்கு நேர் படத்தில் இடம் பெற்ற எங்கெங்கே பாடலை மறக்க முடியுமா.. அந்தப் பாடல் மொத்தமும் அட்டகாசமான யூத் பேக்கேஜ். இசை, குரல்கள், கலைஞர்கள், காட்சியமைப்பு என மொத்தப் பாடலும் சூப்பர் ஹிட்டானது.
பிறமொழிப் பாடகராக இருந்தாலும், தமிழில் வார்த்தைகளை மிகத் தெளிவாகவும் அழகாகவும் உச்சரிப்பதில் அவர் காட்டிய அக்கறை பாராட்டுக்குரியது. ஆஷா போஸ்லே பாடிய பெரும்பாலான தமிழ் ஹிட் பாடல்கள் இளையராஜாவின் இசையமைப்பிலேயே அமைந்தன. இவர்களின் கூட்டணி இசை ரீதியாகப் பல புதுமைகளையும் செய்தது.

