வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அளித்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து, இன்று (18) நண்பகலுடன் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மதியத்துடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் செயல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கண்டித்துள்ளார்.
கடை உரிமையாளர்களை தங்கள் வணிக நிறுவனங்களை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் சட்ட விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய அச்சுறுத்தல்கள் மக்களின் ஜனநாயக உரிமையான போராட்டத்தை மீறுவதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் 32 வயதுடைய ஒருவரின் சமீபத்திய மரணத்திற்கு நீதி கோரியும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு போராட்டம் ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமிழரசுக் கட்சி உட்பட பல அரசியல் குழுக்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வழமைப் போல் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சில வர்த்தக சங்கங்கள் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், பல வர்த்தக சங்கங்கள் அதை ஆதரிக்க மறுப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.