இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புற்றுநோய் சிகிச்சை சுகாதாரத் துறையின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துவதாகவும், மொத்த மருந்து செலவில் கிட்டத்தட்ட 30 சதவீதம் புற்றுநோய் மருந்துகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் புற்றுநோய் மருந்துகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அவற்றின் செலவுகள் மிக அதிகம் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையர்களில் 30 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கிடையில் ஏற்படும் பெரும்பாலான மரணங்களுக்குத் தொற்றுநோயல்லாத நோய்கள் (NCDs) காரணமாக இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதனால், புற்றுநோய் மற்றும் பிற தொற்றாத நோய்களின் அதிகரித்து வரும் நிகழ்வுகளைத் தடுப்பதற்கு, ஆரம்பக்கால கண்டறிதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
புற்றுநோய் மற்றும் ஏனைய தொற்றாத நோய்களினால் (NCDs) அதிகரித்துவரும் பாதிப்பைக் குறைத்துக்கொள்வதற்கு, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.