Monday, March 24, 2025 9:58 pm
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அமைதி காக்கும் படையினரால் ’படுகொலை செய்யப்பட்டதாக’ கூறப்படுவோரின் சிலரின் எச்சங்களுக்கு இப்போது முறையாக இறுதி கிரியைகள் செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்திய அமைதிப் படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தாயினதும் , சகோதரனதும் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு இந்து சமய முறைப்படி இறுதி கிரியைகளை ஞாயிற்றுக்கிழமை (23)பிள்ளைகள் செய்துள்ளனர்.
அந்த அமைதி படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த 1987ஆம் ஆண்டு கால பகுதியில் பெண்ணொருவரையும் அவரது மகனையும் இந்திய இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்தனர் என்று கூறப்படுகிறது.
அக்கால பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சி , அப்பெண்ணின் கணவன் தமது ஏனைய பிள்ளைகளின் உயிரை காப்பாற்றும் நோக்குடன் , வீட்டின் வளவினுள் தனது மனைவி மற்றும் உயிரிழந்த பிள்ளையில் சடலங்களை புதைத்து , அதற்கு நடுகல் நாட்டினார்.
பின்னர் தமது உயிரையும், குடும்பத்திலுள்ள இதர நபர்களின் உயிர்களையும் பாதுகாக்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் இருந்து தனது ஏனைய பிள்ளைகளுடன் வெளிநாடொன்றுக்கு இடம்பெயர்ந்து அங்கு வசித்துவந்தார்.
அதன் போது, தனது மனைவி, பிள்ளையின் உடல்கள் மீள எடுக்கப்பட்டு , இந்து சமய முறைப்படி தகன கிரியை செய்ய வேண்டும் என தனது மற்றைய பிள்ளைகளிடம் கூறி வந்துள்ளார்.
அந்நிலையில் அவரும் சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் காலமான நிலையில் , தமது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் முகமாக , யாழ்ப்பாணம் திரும்பிய பிள்ளைகள் , தமது தாய் மற்றும் சகோதரனின் சடலங்களை மீள தோண்டி எடுப்பதற்கு, நீதிமன்றில் அனுமதி கோரி வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
குறித்த வழக்கினை விசாரித்த நீதிமன்று அதற்கு அனுமதியினை வழங்கியதை அடுத்து , தாய் மற்றும் தமது சகோதரனின் எலும்பு கூட்டு எச்சங்களை மீள எடுத்து , இந்து சமயமுறைப்படி சடங்குகள் செய்த பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி கிரியைகளும் இடம்பெற்றன.

